Friday, 31 August 2018

என் அழகிய காமிராவே

எண் கனவெல்லாம் குவித்து
உன்னை கையில் தாங்கிய
முதல் நொடி ஈன்ற தாய் போல
பெருமை கொண்டேன்

எத்தனை எத்தனை நாட்கள்
உன்னை கையில் ஏந்த
துடித்திருப்பேன் - தூக்கம்
தொலைத்து இருப்பேன்

புதிதாய் பிறந்த சேயாய்
உன் மேல் துரும்பும்
தீண்டாமல் பார்த்து கொண்டும்
பொய்யாய் துடைத்து விட்டேன் 

என் விழியால் கண்ட
உலகை விட உன் - 
வழியே கண்டவுலகில் 
புதுமை கண்டேன்

எங்கே சென்றாலும்
உன்னை அள்ளி தூக்கி
என் பயணங்களில்
உன்னை சேர்த்துக்கொண்டேன்

எத்தனை பேருக்கு நினைவுகளை
திரும்பிப்பார்க்க வைத்திருப்பேன்
உன்னால் 'என் அழகிய காமிராவே..'


Sunday, 26 February 2017

நான் நடுத்தர புத்தன்



ஆசைகளை துறந்தவன்
புத்தன் என்றால்
நான் யார்?

ஆயிரம் சிந்தனைகள்
லட்சம் கற்பனைகள்
கோடி கனவுகள்
இதை எல்லாம் துறந்தவன்

அப்படி ஆக வேண்டும் என்று
முன்னே ஓட துவங்கினேன்
அப்பாவின் வியர்வை
பின்னே இழுத்தது

அம்மாவின் அழுகை
தடுத்து நிறுத்தியது
தங்கையின் வாழ்க்கை
என் கனவுகளை
தவிடு பொடி ஆக்கியது

பள்ளியில்
மிதிவண்டி கேட்டேன்
அப்பா பழையது ஒன்றை
துடைத்து கொடுத்தார்
ஆசையை துறந்தேன்
பழையதில் பறந்தேன்

பருவத்தில்
காதல் கேட்டேன்
அப்பா கட்டையை காண்பித்தார்
காதலை துறந்தேன்
புத்தகத்தை திறந்தேன்

வளர்ந்து
என் ஆசைக்கு சம்மதம் கேட்டேன்
பணம் இருந்தால் ஆசைபடு
இப்போதைக்கு வேலைக்கு ஓடு என்றார்
ஆசையை துறந்தேன்
வேலை தேடி திரிந்தேன்

முதிர்ந்து
திருமணம் கேட்டேன்
தங்கையை கை காண்பித்தார்
அதையும் துறந்தேன்
இரவிற்கு சேர்த்து உழைத்தேன்

நான் நடுத்தர புத்தன்

Sunday, 19 February 2017

அவளை மறந்து போனோம்


அவர் மேலே போனார்
இவர் மெரினா போனார்
சின்னவர் உள்ளே போனார்

இந்த களேபரங்களில்
அவள் மறைந்து போனாள்

இல்லை இல்லை காமத்தின்
கோர பிடியில் அவள் அன்றே
மறைந்து போனாலும்
நாற்காலி ஆட்டத்தில் நாம்
அவளை மறந்து போனோம்
மறக்கடிக்க செய்யப்பட்டோம்

கர்ப்பிணி பெண் அவள்
கருவில் சிசுவோடு சிதைக்கப்பட்டாள்
தீயில் உயிரோடு வறுக்கப்பட்டாள்

மாடி வீட்டு மங்கையாய்
இருந்தால் அவள் தலைப்பு செய்தியை
தாங்கி இருப்பாள்
பாவம்- கூரை வீட்டின் குயில் தானே
அவள் மனிதி இல்லையே-ஓரத்திலும்
இடம் இல்லை

தலைநகர் என்றால் நாங்கள்
மெழுகுவர்த்தி ஏந்துவோம்
அவள் எங்கோ வரைபடத்தில் இடம்
பிடிக்காத ஊரில் பிறந்தவள் தானே
கண்ணீர் கூட சிந்தமாட்டோம்

பின்னே எங்கே நீதி?
போய் வேலையை பார்

Saturday, 18 February 2017

ஏனென்றால், நீ தமிழனை மட்டுமே எப்போதும் சபிக்கிறாய்


நான்கு கால் நாற்காலிக்கு
நாற்பது பேர் அடித்து கொள்ள
அதற்கும் கூட உயிர் இருந்தால்
தன் கால்களை உடைத்து முடமாக்கி கொள்ளும்

கோமாளிகள் என்று நான் அவர்களை ஏளனம்
செய்வேனா?-இல்லை ஏமாளிகள் நாங்கள்
என்று வெட்கி தலை குனிவேனா?

"ஏனடா இந்த துரோகம்?" என்று அவர்கள் கதரினை
பிடிப்பேனா?- இல்லை நாம் பணம் வாங்கியதால்
ஏற்பட்ட சாபம் என எனையே காரி உமிழ்வேனா?

என் படித்த முட்டாள்களுக்கும் புரியவில்லை
படிக்காத மேதைகளுக்கும் தெரியவில்லை
கையில் அவர்கள் திணித்த ஐந்நூறு-பல பேரின்
ஐந்நூறு கோடி என்று

அடித்து சத்தியம் செய்தபோது
அணைந்தது கற்பூரம் அல்ல-அவர்கள்
வாழ்வின் ஒளி என்று-கொடுத்தது இலவசம்
அல்ல அவர்களின் பகல் வேஷம் என்று

நாங்கள் பிரியாணிக்கு
ஏங்கிய கூட்டம்-போதையில் தூங்கிய கூட்டம்
கையில் கொடி பிடித்தோம்-உடலில்
வர்ணம் அடித்தோம்-இன்று அந்தரத்தில்
கர்ணம் அடிக்குறோம்

ஆண்டவா நீ என்ன நடுவண ஆட்சியா நடத்துகிறாய்?
எனக்கு சந்தேகம் "ஏனென்றால், நீ தமிழனை மட்டுமே
எப்போதும் சபிக்கிறாய்"

Wednesday, 15 February 2017

என் காதல் கண்ணீரில் கரைந்து விட்டது


அடடா இந்த காதல் என்னை கொல்லுதே
அய்யோ என்னை அது அழுது புலம்ப சொல்லுதே

கூண்டினுள்ளே பறவை போல சிறகு இருந்தும் பறக்கலையே
நீல வண்ண கடலலை போல கரையை கூட தாண்டலையே
வலிகள் இருந்தும் வார்த்தையில்லை
வழிகள் தெரிந்தும் போகவில்லை

சிந்திய கண்ணீர் போதுமா
இன்னமும் பொய்கள் வேணுமா
உன் பதிலும் என்ன மௌனமா
சொல்லடி எந்தன் கண்ணம்மா

என் கரம் பிடித்து கூட்டி சென்று
பாதி வழியில் பிரிந்து விட்டாள்
நான் குருடன் என தெரிந்தும் ஏனோ
காட்டின் நடுவில் தவிக்க விட்டாள்

பூ என்று உன்னை நினைத்தேன்
கொடும் புலி என்று காட்டிவிட்டாள்
இருட்டிற்குள் வெள்ளை அடித்து
எனை இன்று ஏமாற்றி விட்டாள்

உன் ஆசைகளின் முன் நான்
பிச்சைகாரன் ஆனேன்
நீ கட்டும் கோட்டைகளுக்காக
என் கனவுகளை அடகு வைக்காதே

நான் வீழ்வேன் என நினைத்தாயோ பெண்ணே
நம் காதல் என் கண்ணீரில் கரைந்து விட்டது

Monday, 13 February 2017

காமம் இல்லாத காதல்


காமம் இல்லாத காதல் இது தோழியே
மோகம் இல்லாத ஆசை இது தோழனே
தவறே செய்யாத மரபு இது தோழியே
பிரிவே இல்லாத உறவு இது தோழனே

உன் கைகள் கோர்த்து கொண்டு நடந்தாலென்ன தோழியே
உன் மடி மேல் நான் கொஞ்சம் சாய்ந்தாலென்ன தோழனே
வாடா மச்சி என்று வாரி அணைப்பேன்
போடா திருடா என செல்லம் கொஞ்சுவேன்

பிறப்பால் பெண்னென்றால் எனக்கு என்ன தோழியே
நீயும் ஆணென்றால் எனக்கு என்ன தோழனே
ஆணும் பெண்னென்ற பிரிவு இங்கு தோற்றது
விதி தான் உன்னை என்னைகொண்டு வந்து சேர்த்தது

எவளோ முகம் பார்த்து மயங்கினால் எனக்கு என்ன தோழனே
எவனோ உனை பார்த்து சிரித்தால் எனக்கு என்ன தோழியே
சற்றே முறைப்புடன் நெருங்கி வந்து நீ என் சொந்தம் என்பேன் தோழனே
உன் முகம் சிவந்து போக கள்ள சிரித்து ரசிப்பேன் அதை தோழியே

உன்னோடு ஒரு பகல், ஒரு இரவு கழிக்க வேண்டும் தோழனே
ஓர் அறையில் இருந்தாலும் தனி படுக்கை வேண்டும் தோழியே
ஓர் படுக்கை என்றாலும் நம்பிக்கை உண்டு தோழனே
கட்டில் சேராத உறவு இது தோழியே

இன்னும் என் தந்தை அருகே தான் உறங்குவேன்
அன்னை, தங்கை ஆனாலும் தள்ளி தான் பழகுவேன்
நாம் கொண்ட உறவுக்கு பெயரென்ன தோழனே
கொச்சை அர்த்தம் செய்யாத காதல் என்று உரக்க சொல்லு தோழியே

Sunday, 12 February 2017

நம் காதல் கடவுள் என்பேன்


நீ விதை என்றால்
நான் உரம் என்பேன்
நம் காதல் மரம் என்பேன்

நீ ரத்தம் என்றால்
நான் சதை என்பேன்
நம் காதல் உயிர் என்பேன்

நீ வரி என்றால்
நான் வடிவம் என்பேன்
நம் காதல் மொழி என்பேன்

நீ இலக்கியம் என்றால்
நான் இலக்கணம் என்பேன்
நம் காதல் தமிழ் என்பேன்

நீ எதுகை என்றால்
நான் மோனை என்பேன்
நம் காதல் கவிதை என்பேன்

நீ குளிர் மேகம் என்றால்
நான் அதில் கருமை என்பேன்
நம் காதல் மழை என்பேன்

நீ அலை என்றால்
நான் நுரை என்பேன்
நம் காதல் கடல் என்பேன்

நீ வளர் என்றால்
நான் பிறை என்பேன்
நம் காதல் முழு நிலவு என்பேன்

நீ நிலவு என்றால்
நான் விண்மீன் என்பேன்
நம் காதல் இரவு என்பேன்

நீ மனம் என்றால்
நான் உடல் என்றால்
நம் காதல் காமம் என்பேன்

நீ வழி என்றால்
நான் நடை என்பேன்
நம் காதல் பயணம் என்பேன்

நீ புவி என்றால்
நான் விசை என்பேன்
நம் காதல் உலகம் என்பேன்

நீ வலி என்றால்
நான் கண்ணீர் என்பேன்
நம் காதல் காயம் என்பேன்

நீ சிரிப்பு என்றால்
நான் அழுகை என்பேன்
நம் காதல் குழந்தை என்பேன்

நீ வெட்கம் என்றால்
நான் நாணம் என்பேன்
நம் காதல் பெண்மை என்பேன்

நீ வீரம் என்றால்
நான் வேகம் என்பேன்
நம் காதல் ஆண்மை என்பேன்

நீ கோபுரம் என்றால்
நான் கருவறை என்பேன்
நம் காதல் கோவில் என்பேன்

நீ உமை என்றால்
நான் சிவன் என்பேன்
நம் காதல் கடவுள் என்பேன்