Sunday, 26 February 2017

நான் நடுத்தர புத்தன்



ஆசைகளை துறந்தவன்
புத்தன் என்றால்
நான் யார்?

ஆயிரம் சிந்தனைகள்
லட்சம் கற்பனைகள்
கோடி கனவுகள்
இதை எல்லாம் துறந்தவன்

அப்படி ஆக வேண்டும் என்று
முன்னே ஓட துவங்கினேன்
அப்பாவின் வியர்வை
பின்னே இழுத்தது

அம்மாவின் அழுகை
தடுத்து நிறுத்தியது
தங்கையின் வாழ்க்கை
என் கனவுகளை
தவிடு பொடி ஆக்கியது

பள்ளியில்
மிதிவண்டி கேட்டேன்
அப்பா பழையது ஒன்றை
துடைத்து கொடுத்தார்
ஆசையை துறந்தேன்
பழையதில் பறந்தேன்

பருவத்தில்
காதல் கேட்டேன்
அப்பா கட்டையை காண்பித்தார்
காதலை துறந்தேன்
புத்தகத்தை திறந்தேன்

வளர்ந்து
என் ஆசைக்கு சம்மதம் கேட்டேன்
பணம் இருந்தால் ஆசைபடு
இப்போதைக்கு வேலைக்கு ஓடு என்றார்
ஆசையை துறந்தேன்
வேலை தேடி திரிந்தேன்

முதிர்ந்து
திருமணம் கேட்டேன்
தங்கையை கை காண்பித்தார்
அதையும் துறந்தேன்
இரவிற்கு சேர்த்து உழைத்தேன்

நான் நடுத்தர புத்தன்

No comments:

Post a Comment